உடுமலை தோட்டக்கலைத் துறை சார்பில் வீடு தேடி வரும் காய்கறிகள்


உடுமலை தோட்டக்கலைத் துறை சார்பில் வீடு தேடி வரும் காய்கறிகள்
x
தினத்தந்தி 24 May 2021 11:04 PM IST (Updated: 24 May 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் வீடு தேடி வரும் வகையில் உடுமலை தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போடிப்பட்டி
உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் காய்கறிகள் வீடு தேடி வரும் வகையில் உடுமலை தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடை திறக்க தடை
கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. அத்துடன் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் காய்கறி, மளிகைக்கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அதேநேரத்தில் தினசரி பயன்பாட்டுக்கான காய்கறிகள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், விவசாயிகள் பாதிக்கப்படாமல் தவிர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை நகராட்சி மற்றும் உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட 38 ஊராட்சிப் பகுதிகளிலும் காய்கறிகள் வீடு தேடி செல்லும் வகையில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் குழுக்கள்
அதன்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள், காய்கறி வியாபாரிகள் போன்றவர்கள் வாகனங்களில் காய்கறி மற்றும் பழங்களை வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில் அவர்களுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பாஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடில்லாமல் காய்கறிகளை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முதல் கட்டமாக உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 25 வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிநாத், திருப்பூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவுப்பொருள்) செல்வக்குமார், துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story