தியாகதுருகம் அருகே போலி டாக்டர் கைது
தியாகதுருகம் அருகே பிளஸ்-2 முடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்
சப்-கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தியாகதுருகம் அருகே விருகாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள ஒரு மருந்துக்கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்த அவர் அருகில் சென்று விசாரித்தார். அப்போது ஊசி போடுவதற்காக காத்து நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பிளஸ்-2 முடித்துவிட்டு...
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் மருந்து கடையின் உள்ளே சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது தியாகதுருகம் அருகே முடியனூர் செங்கமேடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த ராயர் மகன் ரவி(வயது 38), என்பவர் மருந்து கடை நடத்தி வருவதும், பிளஸ்-2 முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த மருந்து கடையை மூடி, கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடு்க்க வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமாருக்கு சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டார்.
கைது
அதன் பேரில் குறிப்பிட்ட மருந்து கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் இது குறித்து வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து ரவியை கைது செய்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, தனி பிரிவு ஏட்டு சேட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story