தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் பரவலை தடுக்க கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையாக ஒரு வாரம் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த 22-ந் தேதி அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று முதல் எந்தவித தளர்வில்லாத முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
இதையொட்டி பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து அரசு பஸ்களும், அந்தந்த போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் ஒன்றிரண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகள்
அதுபோல் தனியார் பஸ்களின் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், செஞ்சி, விக்கிரவாண்டி, மேல்மலையனூர், வானூர் ஆகிய பஸ் நிலையங்கள் மற்றும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் பஸ்கள் எதுவும் இல்லாமலும், பயணிகள் இன்றியும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி வாடகை கார் உள்ளிட்ட வாகனங்களும் ஓடவில்லை. அதே நேரத்தில் அரசு அறிவிப்பின்படி அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை கார், ஆட்டோக்கள் இயங்கின. மேலும் மளிகை, காய்கறி, டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் மாவட்டத்தில் உள்ள 124 டாஸ்மாக் கடைகளும் மூடிக்கிடந்தன.
ஓட்டல்களை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி பார்சல் சேவைக்காக மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
மேலும் ஆங்கில மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தடையின்றி வழக்கம் போல் செயல்பட்டன. பெட்ரோல் நிலையங்கள், ஏ.டி.எம். மையங்கள் தடையின்றி இயங்கின.
வெறிச்சோடிய சாலைகள்
தளர்வில்லா முழு ஊரடங்கினால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள், கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடின.
மேலும் முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்ததோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளுக்காக இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே விழுப்புரம் மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதி வழங்கினர். இ-பாஸ் இல்லாதவர்களை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் எல்லைப்பகுதிகளில் இருந்து அப்படியே திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story