ரெயில்களில் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு ரெயில்களில் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு ரெயில்களில் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முழு ஊரடங்கு
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
ஏற்கனவே கடந்த சில வாரங்களாகவே ஊரடங்கு அமலில் இருந்தது. இருப்பினும் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அவற்றை சார்ந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஊரடங்கில் பனியன் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே திருப்பூரில் இருந்து வடமாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத், மாலை 4 மணிக்கு கொச்சுவேலி முதல் கோர்பா, இரவு 10 மணிக்கு பாட்னா ரெயில் என வடமாநிலங்களுக்கு ரெயில்கள் சென்றன. இந்த ரெயில்களில் தொழிலாளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஒரு சில வாராந்திர ரெயில்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ரெயில்கள் இயங்குவதால் வடமாநில தொழிலாளர்கள் சிரமமின்றி சென்று கொண்டிருக்கிறார்கள். திருப்பூர் ரெயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையே ஊரடங்கு என்பதால் பலரும் நடந்து அல்லது வேறு வாகனங்களின் மூலம் ரெயில் நிலையத்திற்கு வந்து நீண்ட நேரம் ரெயில் நிலைய வளாகத்தில் காத்திருந்தபடி ரெயில்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
------
---
----
Reporter : S.Thiraviya Raja Location : Tirupur - Tirupur
Related Tags :
Next Story