கூடலூர்-கர்நாடக எல்லையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 6 பேர் கைது
கூடலூர்- கர்நாடக எல்லையில் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூர்- கர்நாடக எல்லையில் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன தணிக்கை
தமிழகம், கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரள எல்லையில் சாலைகள் மூடப்பட்டு உள்ளது.
ஆனால் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏராளமான சரக்கு லாரிகள் கொண்டு செல்கிறது. இதனால் மாநில எல்லைகளில் போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபாட்டில்கள் கடத்தல்
இந்த நிலையில் கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லாவில் மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிக்கந்தர், ராஜா மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் ஏற்றுக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு இடையே பதுக்கிவைத்து வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த ஊட்டி பார்சன்வேலி பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 27) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 165 மதுபாக்கெட்டுகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுபோல மற்றொரு காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த 206 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, தேவர்சோலை தேவன்-2 பகுதியை சேர்ந்த சஞ்சீவி தேவ் (29) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து வந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
இதில் மினி லாரிகளில் 42 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளில் வந்த பந்தலூர் அட்டி வயலை சேர்ந்த தியாகராஜா (34), சோலூர் பேரூராட்சி கண்ணெரிமுக்கு பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
6 பேர் கைது
இதனிடையே தேவாலா போலீசார் நீர்மட்டம் என்ற இடத்தில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் காய்கறிகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள், 46 வெளிமாநில மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து லாரியில் இருந்த பந்தலூர் கூவமூலா பகுதியை சேர்ந்த முகம்மது (32), அட்டியை சேர்ந்த சலீம் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
கூடலூர்-கர்நாடக எல்லையில் ஒரே நாளில் மதுபாட்டில்கள், புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story