திருப்பத்தூர் மாவட்டத்தில் 124 வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை


திருப்பத்தூர் மாவட்டத்தில் 124 வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை
x
தினத்தந்தி 24 May 2021 11:41 PM IST (Updated: 24 May 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 124 வாகனங்களில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

124 வாகனங்கள் மூலம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் தளர்வற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தடையின்றி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய தாலுகா பகுதிகளில் வாகனம் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை 124 வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி. திருப்பத்தூர் தாலுகாவில் 35 வாகனங்களில் காய்கறியும், 3 வாகனங்களில் பலசரக்கும், 2 வாகனங்களில் பாலும் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டறம்பள்ளி தாலுகாவில் 11 வாகனங்களில் காய்கறியும், 3 வாகனங்களில் பலசரக்கு, ஒரு வாகனத்தில் பாலும் விற்கப்படுகிறது. 

தினசரி வர நடவடிக்கை

வாணியம்பாடி தாலுகாவில் 22 வாகனங்களில் காய்கறியும், ஒரு வாகனத்தில் பழமும், 2 வாகனத்தில் பலசரக்கு, 18 வாகனத்தில் பாலும் விற்கப்படுகிறது. ஆம்பூர் தாலுகாவில் 16 வாகனங்களில் காய்கறிகளும், 3 வாகனத்தில் பழமும், 6 வாகனத்தில் பலசரக்கும், ஒரு வாகனத்தில் பாலும் விற்கப்படுகிறது.

இந்த வாகனங்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் தினசரி வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார்.

விற்பனை தொடக்கம்

திருப்பத்தூரில் வாணியம்பாடி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இருந்து 50 மினி லாரிகள் முலம் காய்கறிகள், பழங்களை நகராட்சி மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யும் பணியை தாசில்தார் சிவப்பிரகாசம், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை துறை துணை இயக்குனர் ராகினி தொடங்கி வைத்தனர். இருசக்கர வாகனத்தில் சென்று காய்கறிகளை விற்பனை செய்ய அனுமதி இல்லை.

மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறையை 04179220096,7708854436, என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என தாசில்தார் தெரிவித்தார்.

Next Story