ஊரடங்கால் மார்க்கெட் மூடல்: வாகனங்களில் காய்கறிகள் தெருத்தெருவாக விற்பனை வீட்டின் அருகிலேயே பொதுமக்கள் வாங்கினர்


ஊரடங்கால் மார்க்கெட் மூடல்:  வாகனங்களில் காய்கறிகள் தெருத்தெருவாக விற்பனை  வீட்டின் அருகிலேயே பொதுமக்கள் வாங்கினர்
x
தினத்தந்தி 24 May 2021 11:44 PM IST (Updated: 24 May 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கால் மார்க்கெட் மூடலால் வாகனங்களில் காய்கறிகள் தெருத்தெருவாக விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் வீட்டின் அருகிலேயே வாங்கினர்.

புதுக்கோட்டை:
காய்கறிகள் விற்பனை
முழு ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்ததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்கெட்டுகள், காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வகையில் கூட்டுறவுத்துறை மூலம் 60 இடங்களில் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. 
 இதேபோல புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் 42 வார்டுகளுக்கும் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நேற்று முதல் தொடங்கியது. தெருத்தெருவாக காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதேபோல 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 497 கிராம ஊராட்சிகள், அறந்தாங்கி நகராட்சி, 8 பேரூராட்சிகளிலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் வீடு, வீடாக வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டின் அருகேயே காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கையாக நேற்று முன்தினம் கடைவீதிகளுக்கு செல்லாமல் இருந்த பலர் நேற்று தங்களது வீட்டின் அருகேயே தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டனர். தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை இதேபோல காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே வாங்கிக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
அறந்தாங்கி, பொன்னமராவதி,
பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடமாடும் காய்கறி அங்காடி 10 வாகனங்களை உதவி கலெக்டர் ஆனந்த்மோகன் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் அய்யனார், சுகாதார அலுவலர் சேகர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.
கந்தர்வகோட்டை, கீரனூர்
கந்தர்வகோட்டை அருகில் உள்ள அக்கட்சி பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தலைமையில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை  கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் சுய உதவிக்குழு பெண்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் வேன்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை குன்றாண்டார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
ஆவூர், அன்னவாசல்
விராலிமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யும் பணியை விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் (வட்டார ஊராட்சி), ரமேஷ் (கிராம ஊராட்சி) மற்றும் தாசில்தார் சதீஷ் சரவணகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
இலுப்பூர் பேரூராட்சி சார்பில் வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் விற்பனையை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கலந்து கொண்டு 15 விற்பனை வாகனத்தை தொடங்கி வைத்தார். இதில் தாசில்தார் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் பேரூராட்சி பகுதிகளுக்கு 6 காய்கறி வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. 
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக கொரோனா தொற்று நடவடிக்கையின் காரணமாக நேற்று அன்னவாசல் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலிருந்து 15 நடமாடும் காய்கறி வாகனம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் உதயகுமார் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர் பெலிக்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Next Story