கொரோனா தடுப்பூசி தேவையான அளவு இருப்பில் உள்ளது-கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்


கொரோனா தடுப்பூசி தேவையான அளவு இருப்பில் உள்ளது-கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 11:55 PM IST (Updated: 24 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட போளூர் சாலையில் ராமகிஷ்ணா ஓட்டல் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் சுபலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்று தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யப்பட்டதை பார்வையிட்டு வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுரை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
18 வயதில் இருந்து 44 வயது உடையவர்களுக்கு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

58 இடங்களில் முகாம்

மாவட்டத்தில் நேற்று மட்டும் 58 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 

மாவட்டத்தில் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. இந்த முகாம்களுக்காக 35 ஆயிரம் டோஸ் வந்து உள்ளது. 

தகுதி உள்ள அனைவருக்கும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 100 சதவீத ஊரடங்கினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. 

சுமார் 2 ஆயிரம் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

40 டாக்டர்கள் நியமனம்

திருவண்ணாமலையில் ஊரடங்கு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நிரப்பிட முதல்-அமைச்சரிடம் இருந்து வந்த உத்தரவின்படி நேர்முகத் தேர்வின் மூலம் 40 டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் 20 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் 25 லேப் டெக்னீசியன்ஸ், 60 மல்டி பர்போஸ் சுகாதார பணியாளர்கள், 50 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மற்ற விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 

மேலும் மருத்துவ பணியாளர்கள் தேவைப்பட்டால் இந்த விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படுவார்கள்.

200 ஆக்சிஜன் படுக்கைகள்

ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கை கூட்டுவதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஸ் மருத்துவமனை வளாகத்தில் பல பயன்கள் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு அலகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது செயல்பாட்டுக்கு வந்தால் கூடுதலாக சிலிண்டர்கள் பொறுத்தப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சை அங்கேயே செய்ய முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 


Next Story