மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் காய்கறி-பழங்கள் விற்பனை; பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் காய்கறி-பழங்கள் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் அவைகளை வாங்கிச்சென்றார்கள்.
ஈரோடு
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகனங்களில் காய்கறி-பழங்கள் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் அவைகளை வாங்கிச்சென்றார்கள்.
நடமாடும் காய்கறி விற்பனை
தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க ஒருவாரம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தடை காலத்தில் காய்கறிகள்-பழங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க காலை 6 மணி முதல் 12 மணி வரை வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்களில் நேற்று நடமாடும் காய்கறி வாகனங்கள் இயங்கின. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து காய்கறிகள், கனிகளை வாங்கிச்சென்றார்கள்.
பெருந்துறை
பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி பகுதியில் அனைத்து வீதிகளிலும் 25-க்கும் மேற்பட்ட நடமாடும் காய்கறி வாகனங்கள் இயக்கப்பட்டன.
4 சக்கர வாகனம், 3 சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனங்களில் காய்கறி, கனிகள் விற்பனை நடைபெற்றது.
பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகள், பழங்களை வாங்கிச்சென்றார்கள்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் அமுதா உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அலுவலர் வேல்முருகன் மேற்பார்வையில் நேற்று காலை முதல் சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம், கடைவீதி, கோம்புபள்ளம்பகுதி, வடக்குபேட்டை ஆகிய பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை ஏற்றிக்கொண்டு 18 வேன்களில் விற்பனை நடைபெற்றது. வீட்டின் அருகிலேயே காய்கறி வாகனங்கள் வந்ததால் பொதுமக்கள் எளிதாக சென்று வாங்கிக்கொண்டார்கள்.
. மேலும் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலும் தோட்டக்கலை சார்பில் 2 வேன்களில் காய்கறி விற்பனை நடைபெற்றது.
கோபி
கோபி நகராட்சியில் ஆணையாளர் ராமசாமி முன்னிலையில் 30 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழவகைகள் விற்பனை செய்யப்பட்டன. 8 வாகனங்களில் காய்கறிகளும், 4 வாகனங்களிலும் பழங்களும் விற்பனை செய்யப்பட்டது.
வாகனங்களில் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று நகராட்சி அதிகாரிகள் கண்காணித்தார்கள்.
சென்னிமலை
சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் முதல்கட்டமாக 3 வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனையை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் த.காயத்ரி இளங்கோ தொடங்கி வைத்தார். இதனை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ஆர்.சாவித்திரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், சென்னிமலை பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்ய மேலும் 20 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் விற்பனை செய்யப்படும் வாகனங்களில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். பாதுகாப்பு கருதி விற்பனையாளர்கள் மட்டும் கைகளில் கையுறை அணிந்து காய்கறிகளை எடுத்து கொடுப்பார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பி.செங்கோட்டையன், குமாரவலசு ஊராட்சி தலைவர் பி.இளங்கோ மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள முருங்கத்தொழுவு, மைலாடி, நாமக்கல்பாளையம், 1010 நெசவாளர் காலனி ஆகிய இடங்களில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழ வகைகள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டன. 9 வாகனத்திலும் காய்கறிகளும், 6 வாகனத்தில் மளிகை பொருட்களும், 3 வாகனத்தில் பழங்களும் விற்பனை செய்யப்பட்டன. முன்னதாக நகராட்சி ஆணையாளர் பழனிசாமி விற்பனையை தொடங்கிவைத்தார்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் 7 வாகனங்களில் காய்கறிகள் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் ஆப்பக்கூடல் நால்ரோடு, அத்தாணி ரோடு, அந்தியூர்ரோடு, ராமகிருஷ்ணா நகர், சக்தி நகர், பவானிரோடு உள்பட அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகள், பழங்களை வாங்கிச்சென்றார்கள். ஆப்பக்கூடல் பேரூராட்சி (பொறுப்பு) செயல்அலுவலர் பழனியப்பன் விற்பனையை தொடங்கிவைத்தார்.
பவானிசாகர்
கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் வேளாண்மை இணை இயக்குநர் சண்முகசுந்தரம் ஆலோசனைப்படி சத்தியமங்கலம் உழவர் சந்தையின் நிர்வாக அதிகாரி அமுதா மேற்பார்வையில் தோட்டக்கலை மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பாக சத்தியமங்கலம் நகரம் மற்றும் அரியப்பம்பாளையம் புறநகர் பகுதியில் வேன் மூலம் வீடு, வீடாக சென்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்தனர். நேற்று முன்தினம் பல்வேறு பகுதியில் காய்கறிகள் மிக அதிக விலைக்கு விற்ற நிலையில் நேற்று வாகனங்களில் அரசு நிர்ணயம் செய்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.
கவுந்தப்பாடி
சலங்கபாளையம் பேரூராட்சி நிர்வாகமும், தோட்டக்கலை துறையும் இணைந்து விவசாயிகளிடம் காய்கறிகள், பழங்களை கொள்முதல் செய்து வாகனங்களில் வீதி வீதியாக கொண்டு சென்று பொது மக்களிடம் விற்றார்கள். இந்த பணியை பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
கொடுமுடி
கொடுமுடி பேரூராட்சி சார்பில் வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. கொடுமுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பேரூராட்சி ஊழியர்கள் காய்கறிகளை விற்பனை செய்தார்கள். பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் செய்திருந்தார்.
Related Tags :
Next Story