குமரியில் 60 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு


குமரியில் 60 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 May 2021 1:53 AM IST (Updated: 25 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் ஊரடங்கை மீறுபவர்களை கண்டறிய, 60 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்:
குமரியில் ஊரடங்கை மீறுபவர்களை கண்டறிய, 60 சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகம் முழுவதும் நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை யாரும் மீறுகிறார்களா? என கண்காணிக்க முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் நாகர்கோவில் வடசேரி சந்திப்பு பகுதியில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரித்தார். மேலும் அவர்களது அடையாள அட்டை மற்றும் வெளியே செல்வதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு
இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவசர தேவைக்காக இ-பதிவு செய்தவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருவதால், யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கொரோனா தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
60 சோதனைச் சாவடிகள்
மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக போலீசார், 28 இருசக்கர வாகனம், 20 நான்கு சக்கர வாகனம் மூலம் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பிற பகுதிகளில் 40 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் 20 சோதனைச் சாவடிகள் என மொத்தம் 60 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் கடமையை முன்வைத்து பணியாற்றும் போலீசாருக்கு வாழ்த்துகளுடன் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் நாளொன்றுக்கு காலை மற்றும் இரவு நேரம் என 2 கட்ட சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். போலீசாரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 7 நாட்களில் 25 ஆயிரம் முககவசம் மற்றும் 5 ஆயிரம் முக பாதுகாப்பு கவச கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை குமரி மாவட்டத்தில் 137 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறினார்.

Next Story