பெருந்துறையில் ஊரடங்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 210 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்- 60 வாகனங்கள் பறிமுதல்; போலீசார் நடவடிக்கை
பெருந்துறையில் முழு ஊரடங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 210 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 60 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பெருந்துறை
பெருந்துறையில் முழு ஊரடங்கு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 210 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 60 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
வாகன சோதனை
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை நேற்று பகல் 11 மணி அளவில் பெருந்துறைக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா அருகில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக சிலர், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தனர். உடனே அவர்களை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் சிலர் முரண்பாடான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து வாகனங்களில் வந்தவர்களை ஊரடங்கை மீறி இதுபோன்று ரோட்டில் சுற்றக்கூடாது என எச்சரித்து அனுப்பினார். இனிமேல் ஊரடங்கை மீறி ரோட்டில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ரூ.50 ஆயிரம்
இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜன், விஜயராஜ், மகேந்திரன், மோகன்ராஜ், இளமாறன் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது ஊரடங்கை மீறி ரோட்டில் சுற்றியதாக 5 கார்கள், 54 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஊரடங்கு முடிந்த பின்னர்தான் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 15 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.3 ஆயிரமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 5 பேருக்கு தலா ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரத்து 500-ம், போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 150 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.15 ஆயிரம், ஊரடங்கை மீறிய வாகன உரிமையாளர்கள் 60 பேரிடம் இருந்து தலா ரூ.500 என ரூ.30 ஆயிரம் உள்பட ஊரடங்கு மற்றும் பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 210 பேரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்து 500-ஐ அபராதமாக போலீசார் வசூல் செய்தனர்.
Related Tags :
Next Story