முக்கிய ரோடுகள் அடைப்பால் வெறிச்சோடியது ஈரோடு மருத்துவ காரணங்களால் சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி; போலீசார் தீவிர சோதனை


முக்கிய ரோடுகள் அடைப்பால் வெறிச்சோடியது ஈரோடு மருத்துவ காரணங்களால் சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி; போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 May 2021 8:27 PM GMT (Updated: 24 May 2021 8:27 PM GMT)

முக்கிய ரோடுகள் அடைப்பால் ஈரோடு மாநகரத்தின் பல பகுதிகள் வெறிச்சோடின. தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ள போலீசார், மருத்துவ காரணங்களுக்காக சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.

ஈரோடு
முக்கிய ரோடுகள் அடைப்பால் ஈரோடு மாநகரத்தின் பல பகுதிகள் வெறிச்சோடின. தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ள போலீசார், மருத்துவ காரணங்களுக்காக சென்றவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர்.
போலீசார் சோதனை
தமிழ்நாட்டில் நேற்று காலை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் முழுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
 ஈரோடு மாநகராட்சி பகுதியில் நேற்று காய்கறி சந்தைகள், மளிகைக்கடைகள் இயங்கவில்லை. பால் விற்பனை நிலையம், மருந்து கடைகள் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் சேவை நடந்தது.
தேவையற்ற முறையில் இயங்கும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கவும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே ஈரோடு பகுதிக்குள் வர அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக மருத்துவ தேவைக்காக வந்தவர்கள், உரிய இணைய வழி இ-பதிவு செய்து இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
வெறிச்சோடியது
பன்னீர்செல்வம் பூங்கா பகுதி அடைக்கப்பட்டு ஒரே வழியில் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. காலை நேரத்தில் சற்று அதிகமாகவே வாகனங்கள் வந்து சென்றன. அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மருத்துவ காரணங்களுக்காக சென்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிடி.ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்வதற்காகவும், ஆஸ்பத்திரிகளில் சேர்க்கவும் வந்த வகையில் ஏராளமான வாகனங்கள் வந்தன. போலீசார் அதற்கான பரிசோதனை முடிவுகளை பார்த்து அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மேட்டூர் ரோடு, மேம்பாலம் ஆகியவை வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவுக்கு அடைக்கப்பட்டன. இதனால் இந்த பகுதிகள் முழுமையாக வெறிச்சோடின. ஈரோடு பஸ் நிலையமும் நேற்று முழுமையாக வெறிச்சோடியது.
கட்டுக்குள் வந்த ஊரடங்கு
கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் கொங்கலம்மன்கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, காமராஜ் வீதி, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, பெருந்துறை ரோடு, ஈ.வி.என்.ரோடு, சென்னிமலை ரோடு, பூந்துறை ரோடு, கே.என்.கே.ரோடு, சத்தி ரோடு, வீரப்பன்சத்திரம், குமலன் குட்டை, திண்டல், நாடார் மேடு, கரூர் ரோடு, கச்சேரி வீதி உள்ளிட்ட அனைத்து வியாபாரத்தலங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.
வாகனங்கள் அவ்வப்போது சென்று வந்தன. ஆங்காங்கே போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கேள்விகள் கேட்டதால் பலரும் அந்தந்த பகுதிகளுக்குள்ளேயே சுற்றி வந்தனர். இதனால் வீணாக நீண்ட தூரம் சுற்றி வருபவர்களை காண முடியவில்லை.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “கடந்த 15 நாட்களை விட தற்போது ஊரடங்கு ஓரளவு கட்டுக்குள் உள்ளதாக தெரிகிறது. இன்னும் நடமாட்டத்தை குறைத்தால் கொரோனா பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும்” என்றார்.

Next Story