அவசியமின்றி வந்த கார்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
ஈரோட்டில் அவசியமின்றி சுற்றி வந்த கார்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் அவசியமின்றி சுற்றி வந்த கார்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
வாகன சோதனை
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை உத்தரவின்பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மற்றும் அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் அனைத்து முக்கிய பகுதிகளிலும் நின்று பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டாலும், ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதை காரணமாக வைத்து பலரும் ஆஸ்பத்திரிக்கு செல்வதாகவும் மருந்துகள் வாங்குவதாகவும் சொல்லிவிட்டு வாகனங்களில் சுற்றி வருவது அதிகமாக இருந்தது. நேற்று ஈரோடு மாநகரில் பல பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாதவாறு தடுப்பு வைக்கப்பட்டதால் காளைமாடு சிலை, சுவஸ்திக் கார்னர், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் அதிகமாக வாகனங்கள் வந்து சென்றன. அங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல்
பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று மதியம் 12 மணி அளவில் 16 கார்கள் உள்பட 70 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களுக்கு ஊரடங்கு அரசு விதிகளை மீறிய குற்றத்துக்காக தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் நேற்று ஒரே நாளில் ஈரோட்டில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு கூறும்போது, “மருத்துவ தேவைக்காக செல்பவர்கள், மருத்துவ பணியாளர்கள், அனுமதிக்கப்பட்ட அரசு அலுவலகங்களின் பணியாளர்கள் தவிர யாரும் சாலைகளில் நடமாடக்கூடாது. ஆனால் அதையும் மீறி எந்த தேவையும் இல்லாமல் வரும் அனைவர் மீதும் அபராத நடவடிக்கை மற்றும் வாகன பறிமுதல் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த வாகனங்கள் அபராதம் செலுத்திய பின்னர் 2 நாட்கள் கழித்து உயர் அதிகாரிகள் அனுமதி தந்தால் மட்டுமே திரும்ப வழங்கப்படும்” என்றார்.
மாவட்டத்தில்...
ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் விதிமுறையை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், வாகனங்களையும் பறிமுதல் செய்தார்கள்.
அதன்படி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 910 இருசக்கர வாகனங்கள், 80 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 990 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வாகன உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாததாக 270 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
Related Tags :
Next Story