கொரோனா நோயாளி தப்பி ஓடியதால் பரபரப்பு
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு:
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா உறுதி
நித்திரவிளை பகுதியை சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 4 தினங்களுக்கு முன் தேனி மாவட்டத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு காரில் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த போது நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தினர். ஆனால், அவர் வீட்டு தனிமையை புறக்கணித்து அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி நித்திரவிளைக்கு வந்தார்.
இங்கு வந்த அவர் நேற்று முன்தினம் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பல இடங்களுக்கு சுற்றி வந்தார். இவரது வீட்டின் அருகே நித்திரவிளை சந்தை உள்ளது. சந்தைக்கும் சென்று வந்துள்ளார். அவரிடம் உறவினர்கள் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.
ஆம்புலன்சில் அழைத்து சென்றனர்
இதனையடுத்து அவரது மனைவி மற்றும் மகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து டாக்டர்களின் அறிவுறுத்தல் படி 108 ஆம்புலன்சுடன் மருத்துவமனை ஊழியர்கள் நித்திரவிளை பகுதிக்கு வந்தனர். உறவினர்கள் உதவியுடன் அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கொரோனா பாதித்த நபர் சந்தைக்கு சென்று வந்ததால் நேற்று முன்தினம் சந்தைக்கு பொருட்கள் வாங்க சென்றவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் கலக்கமடைந்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்தார்
இந்தநிலையில் அந்த நபரை பார்ப்பதற்காக உறவினர் ஒருவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை காணாததால் நித்திரவிளையில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே கொரோனா சிகிக்சைக்காக அனுப்பட்டவர் ஆட்டோவில் நித்திரவிளையில் வந்து இறங்கினார். இதை கண்டு அந்த பகுதியினர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் அங்கு விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் தன்னை யாரும் கவனிக்காத போது வெளியே வந்து ஆட்டோ பிடித்து நித்திரவிளைக்கு வந்ததாக கூறினார். இதையடுத்து போலீசார் உதவியுடன் அவரை பிடித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நித்திரவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story