தளர்வு இல்லாத முழு ஊரடங்கு: நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு - ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காட்டுத்தீ போல வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் கடந்த 10-ந்தேதி நேற்று முன்தினம் வரை அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதில் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. இருந்த போதிலும் கொரோனா தொற்று குறையவில்லை.
இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்கள் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் காய்கறி, மளிகை கடைகளில் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் நாகை கடைத்தெரு, நீலா வீதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. பால், மருந்தகம், பெட்ரோல் விற்பனை நிலையம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் நாகை கடைத்தெரு, நீலா வீதிகள், புதிய, பழைய பஸ் நிலையங்கள், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.
பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
முழு ஊரடங்கு காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் காய்கறி, பழங்கள், மளிகை, பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்கள் நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையானவற்றை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும், இந்த உணவு பொருட்கள் வாங்க அல்லது விலை விவரம் தேவைப்படுவோர் 9443332179 என்ற நகராட்சியின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ செல்போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என நகராட்சி ஆணையர் ஏகராஜ் தெரிவித்துள்ளார்.
திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம், வடகரை, கோட்டூர், வவ்வாலடி, திருப்புகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன அத்தியாவசிய பொருட்களை நேற்று முன்தினமே வாங்கி சேமித்து வைத்துக்கொண்டதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. .திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றியும், இ-பதிவு இல்லாமலும் வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகையை அடுத்த நாகூரில் பெரிய கடைத்தெரு, நியூ பஜார் சாலை, தேரடி தெரு, நாகூர்-நாகை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
நாகூர் கொத்தவால் சாவடி, மேலவாஞ்சூர் சோதனை சாவடி, கொட்டாரக்குடி சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நாகூர் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 27 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூரில் கடைவீதி, கச்சனம் சாலை, நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது.. கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளான தேவூர், கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, கொளப்பாடு, வலிவலம். நீலப்பாடி, கோகூர், ஆந்தக்குடி, காக்கழனி, அத்திப்புலியூர், நீலப்பாடி, குருக்கத்தி, ஆழியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கீழ்வேளூர் போலீசார் கானூர் சோதனை சாவடி, தேவூர், கீழ்வேளூர், ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யம், கரியாப்பட்டினம், குரவப்புலம், செம்போடை உள்ளிட்ட 60 ஊராட்சிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
Related Tags :
Next Story