ஊரடங்கிலும் செயல்படும் பட்டு அங்காடி


ஊரடங்கிலும் செயல்படும் பட்டு அங்காடி
x
தினத்தந்தி 25 May 2021 7:45 PM IST (Updated: 25 May 2021 7:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் உடுமலையை அடுத்துள்ள மைவாடி பட்டு அங்காடி செயல்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடிப்பட்டி
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் உடுமலையை அடுத்துள்ள மைவாடி பட்டு அங்காடி செயல்படுவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருவாய் தரும் தொழில்
வெண்பட்டு உற்பத்தியில் உடுமலை பகுதி தமிழகத்திலேயே முதலிடம் பெற்று வருகிறது. இங்கு வெண்பட்டு உற்பத்திக்கான சிறந்த பருவநிலை நிலவுவதால் இங்கு உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகள் சிறந்த தரத்துடன் உள்ளது. மேலும் மிகக் குறைந்த காலத்தில் சிறந்த வருவாய் தரும் தொழிலாக வெண்பட்டு உற்பத்தி இருப்பதால் விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்  வரும் 31ந் தேதி வரை தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மருந்துக்கடை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர மளிகை, காய்கறிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவலின் முதல் அலை பாதிப்பை ஏற்படுத்தியபோது இதுபோன்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெண்பட்டுக்கூடுகளை வாங்குவதற்கு ஆளில்லாத நிலையில் விவசாயிகள் மிகக்குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டது. அதிலும் பல மாதங்கள் கழித்து அதற்கான தொகையைப் பெற்ற விவசாயிகளும் உண்டு. ஆனால் தற்போது அதுபோன்ற சூழல் ஏற்படாமல் தவிர்க்க பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மைவாடி பட்டு அங்காடியில் விவசாயிகள் கொண்டு வரும் வெண்பட்டுக் கூடுகளை விற்பனை செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழக்கம் போல தினசரி மதியம் 12 மணியளவில் வெண்பட்டு ஏலம் நடைபெறுகிறது.
வியாபாரிகள் ஏமாற்றம்
ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே விவசாயிகள் வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வருவதால் வியாபாரிகள் ஏமாற்றமடைகின்றனர். அந்த வகையில் நேற்று இந்த அங்காடிக்கு 2 விவசாயிகள் மட்டும்  200 கிலோ அளவுக்கு மட்டுமே வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இதனால் கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். குறைந்த அளவில் பட்டுக்கூடுகளை வாங்கிச்சென்றாலும் போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் அதிக அளவிலேயே உள்ளது. இதனால் அதிக விவசாயிகள் இந்த அங்காடிக்கு வெண்பட்டுக்கூடுகளைக் கொண்டு வரும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கொரோனா பரவலால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்காக கொண்டு செல்வதில் விவசாயிகள் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே தங்கள் அருகில் உள்ள அரசு அங்காடியை வெண்பட்டு உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகளின் வேண்டுகோளாக உள்ளது.
அதேநேரத்தில் மற்ற பகுதிகளுக்கும் மைவாடி அங்காடிக்கும் இடையில் உள்ள விலை வித்தியாசத்தை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story