பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
குமரலிங்கம் அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
போடிப்பட்டி
குமரலிங்கம் அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உணவுப்பற்றாக்குறை
குமரலிங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, கரும்பு, மக்காச்சோளம், மா உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் விளைநிலங்களை சுற்றி சேலைகளைக் கட்டி பயிர்களை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் காட்டுப் பன்றிகள் உள்ளது. இவை மலைப்பகுதியில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டபோது மலையடிவாரப்பகுதிகளுக்கு வரத்தொடங்கியது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சாப்பிட்டதும் அதன் சுவைக்கு அடிமையாகி கீழேயே தங்கி விட்டது. இவ்வாறு ஒவ்வொரு குழுக்களாக மலையிலிருந்து வெளியேறி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் புதர்கள் உள்ளிட்ட மறைவிடங்களில் குடும்பம் குடும்பமாக வாழத்தொடங்கி விட்டது.
சேதம்
தற்போதைய நிலையில் காட்டிலுள்ள காட்டுப்பன்றிகளையும் ஊருக்குள் உள்ள காட்டுப்பன்றிகளையும் கணக்கெடுத்தால் ஊருக்குள்ளேயே அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு காட்டுப்பன்றிகள் பல மடங்காகப் பெருகி விட்டது. ஆரம்ப கட்டங்களில் மலையிலிருந்து எப்போதாவது விளைநிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகள் இப்போது அழையா விருந்தாளிகளாக அடிக்கடி வரத்தொடங்கி விட்டன. விளை நிலங்களுக்குள் கூட்டமாக நுழையும் காட்டுப் பன்றிகள் பயிர்களை தின்பதை விட கடித்தும், மிதித்தும் சேதப்படுத்துவது அதிகமாக உள்ளது. பார்ப்பதற்கு சாதாரண பன்றிகளைப்போல தோற்றமளித்தாலும் காட்டுப்பன்றிகள் மூர்க்கமானதாக இருக்கின்றன.
இதனால் அவற்றைக்கட்டுப்படுத்துவது எளிதான விஷயமாக இல்லை. இவற்றின் மூலம் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும். எனவே அவற்றை விளைநிலங்களுக்குள் நுழையாமல் தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். பொதுவாக விளைநிலங்களைச் சுற்றி சேலைகளைக்கட்டிவிட்டால் அவை காற்றில் ஆடும்போது மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக அஞ்சும் காட்டுப் பன்றிகள் விளை நிலத்துக்குள் நுழைவதில்லை.
நடவடிக்கை
தற்போதைய நிலையில் வனப்பகுதிக்கு வெளியே இருக்கும் பன்றிகள் எல்லாம் காட்டுப்பன்றிகள் இல்லை என்று அறிவித்து அவற்றை சுட்டுக்கொல்ல வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை பல மடங்காகப்பெருகி விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story