பலத்த சூறைக்காற்று; மரங்கள் முறிந்து விழுந்தன
வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பிகள் அறிந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பிகள் அறிந்ததால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
பலத்த சூறைக்காற்று
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் இன்று (புதன்கிழமை) மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. இந்த நிலையில் புயல் காரணமாக நேற்று நாகையில் மதியத்துக்கு மேல் சூறைக்காற்று வீசியது. புழுதிப் புயல் போல காற்று வீசியதால், அத்தியாவசிய தேவைக்காக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சில கடைகளின் பெயர் பலகைகள் சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்டன. சில இடங்களில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. இதனை மின்துறை பணியாளர்கள் சரி செய்தனர்.
மரங்கள் முறிந்தன
இதேபோல வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கோடியக்கரை, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியது. கடற்கரையையொட்டி உள்ள தென்னடாரில் சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பூழுதி பறந்ததால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் முன்களப்பணியாளர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றவர்கள் அவதிப்பட்டனர்.மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன இதனால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
பலத்த காற்றின் காரணமாக கடல் அலைகள் உயரமாக எழுந்ததால் அகஸ்தியன்பள்ளியில் உப்பள பகுதியில் உள்ள 100 அடி வாய்க்காலில் தண்ணீர் புகுந்தது. சூறைக்காற்றினால் வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் முருங்கை, வாழை உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.