கர்நாடகா-கேரள மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை


கர்நாடகா-கேரள மாநில எல்லைகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 25 May 2021 10:37 PM IST (Updated: 25 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கூடலூர்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. 

இதனால் மாநிலங்களுக்கு இடையே சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏராளமான லாரிகளில் கூடலூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. 

இதனால் தமிழகம்-கர்நாடகா மற்றும் கேரளா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் பகுதியில் கக்கநல்லாவில் தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கூடலூர்- கேரளா எல்லையான நாடுகாணி, சோலாடி, பாட்டவயல் உள்பட பல இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றி வரும் சரக்கு லாரிகளில் மதுபானங்கள் அதிகளவு கடத்துவதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சென்ற சரக்கு லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காய்கறிகளுக்கு இடையே மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்ப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கக்க நல்லா, நாடுகாணி, பாட்ட வயல், சோலாடி, நம்பியார்குன்னு உட்பட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் காலை 2 மணிநேரம் மளிகை, காய்கறி மற்றும் மதுபான கடைகள் திறக்கப்படுகிறது.

இதை பயன்படுத்தி வாகன டிரைவர்கள் மது பாட்டில்களை வாங்கி காய்கறிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வருகின்றனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு லாரிகளில் யாரும் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் கடத்தி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story