விவசாய பணிகளுக்காக 256 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு
ஊட்டியில் விவசாய பணிகளுக்காக 256 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. இதை பெற விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளி மாநிலங்கள், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விவசாய பணிகளுக்கு செல்லும் வாகனங்கள், விளைபொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி ரோஜா பூங்கா அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற விவசாயிகள், சரக்கு வாகன டிரைவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்வதற்கான சிட்டா, பட்டா மற்றும் ஆதார் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.
சரக்கு வாகனங்களில் விளைபொருட்களை எடுத்து செல்ல ஓட்டுனர் உரிமம், ஆதார் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அனுமதி சீட்டில் வாகன பதிவு எண், பெயர், செல்போன் எண், எத்தனை நபர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதி சீட்டை ஒரு வாரம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊட்டி வட்டாரத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய 183 வாகனங்கள், விவசாய பணிகளுக்கு செல்லும் 256 வாகனங்கள், கேரட் அறுவடை பணிக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் 43 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் வட்டாரங்களிலும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் விவசாய பணிகளுக்காக செல்லும் வாகனங்கள் எவ்வித தடையும், இடையூறுமின்றி சென்று வரலாம். பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story