பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 672 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 672 மதுபாட்டில்கள் பறிமுதல் டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 May 2021 10:56 PM IST (Updated: 25 May 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பெங்களூருவில் இருந்து மினிலாரியில் கடத்தி வரப்பட்ட 672 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை

ரகசிய தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. 2 வாரத்துக்கு மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் சிலர் அண்டை மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் பெங்களூரு- கன்னியாகுமரி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

கர்நாடக மதுபாட்டில்கள்

அப்போது அந்த வழியாக தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் டிரைவர் மாற்றுப்பாதை வழியாக மினி லாரியை ஓட்டி தப்பி செல்ல முயன்றார். உடனே  போலீசார் அந்த மினி லாரியை பின்னால் துரத்திச் சென்று எல்லை கிராமம் என்னும் இடம் அருகே மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது மினி லாரியில் பலாப்பழங்கள் இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தபோது உள்ளே கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 672 மதுபாட்டில்கள் இருந்தன.

2 பேர் கைது

இதையடுத்து மினி லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன்(வயது 33), டிரைவர் சக்திவேல்(39) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி பலாப்பழங்களுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீசார் மதுபாட்டில்களுடன் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். 


Next Story