சோலையார் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்வு
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் பெய்து வரும் மழை காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 12 அடியாக உயர்ந்து உள்ளது.
சோலையார் அணை
மலைப்பிரதேசமான வால்பாறையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் (பி.ஏ.பி.) முக்கிய அணையான சோலையார் உள்ளது. 160 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெறும் 2 அடிதான் இருந்தது.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அத்துடன் சோலையார் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்தது.
12 அடியாக உயர்வு
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 12.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 352 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தற்போதும் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதுபோன்று அடுத்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. எனவே அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு இருக்கிறது.
நிரம்ப வாய்ப்பு
இது குறித்து வால்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, வால்பாறையில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் குளிர் கடுமையாக இருக்கிறது.
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே சோலையார் அணை விரைவில் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story