கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு இன்று முதல் சிகிச்சை
கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா நோயாளிகளுக்கு இன்று (புதன்கிழமை) முதல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறையவில்லை.
இவர்களுக்கு கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 6500 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சித்த மருத்துவ பிரிவு
இந்நிலையில் கொரோனா முதல் அலையின் போது சித்த மருத்துவ பிரிவு தனியாக தொடங்கி செயல்படுத்தப்பட்டு வந்தது. இதில் 350 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதேபோல் கடலூர் அருகே குமராபுரத்தில் உள்ளள தனியார் கல்லூரியிலும் அலோபதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து சென்றனர். இதேபோல் தற்போதும் சித்த மருத்துவத்திற்கு என்று தனியாக சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
200 படுக்கை வசதிகள்
அதன்படி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி சித்த மருத்துவ சிகிச்சை பிரிவாக இன்று (புதன்கிழமை) முதல் செயல்பட உள்ளது. இங்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு முற்றிலும் சித்த மருத்துவம் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்காக 200 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு காலை, மாலை கபசுரக் குடிநீர், சுண்டல், மூலிகை தேனீர், யோகா நேச்சுரோபதி மூலம் மூச்சுப்பயிற்சி யோகா போன்ற பல்வேறு வகையான சிகிச்சை முறைகளும் அளிக்கப்பட உள்ளதாக சித்த மருத்துவ பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story