கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 9 பேர் சாவு


கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட 9 பேர் சாவு
x
தினத்தந்தி 25 May 2021 11:12 PM IST (Updated: 25 May 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 2 பெண்கள் உள்பட 9 பேர் இறந்தனர். மேலும் புதிதாக 613 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்நோய் தொற்று புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. அதுபோல் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 29,781 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 206 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 25,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 பேர் சாவு

இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே உள்ள கோனூரை சேர்ந்த 52 வயதுடையவரும், செஞ்சி அருகே மொடையூரை சேர்ந்த 40 வயதுடையவரும், விழுப்புரம் ஊரல்கரைமேட்டை சேர்ந்த 36 வயதுடையவரும், திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டை சேர்ந்த 56 வயதுடையவரும், திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்த 77 வயதுடைய மூதாட்டியும், விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியும், திண்டிவனம் நாகபுரத்தை சேர்ந்த 70 வயதுடைய முதியவரும், விழுப்புரம் அருகே சுந்தரிப்பாளையத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும் என 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 206-ல் இருந்து 215 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

613 பேருக்கு தொற்று

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 613 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,394 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,348 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,831 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story