ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கினர்


ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கினர்
x
தினத்தந்தி 25 May 2021 11:34 PM IST (Updated: 25 May 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடை களில் பொருட்கள் வினியோகம் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

புதுக்கோட்டை:
ரேஷன் கடைகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை சங்கிலி தொடர் பரவலை தடுக்க நேற்று முன்தினம் முதல் வருகிற 31-ந் தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. புதுக்கோட்டையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் காலையிலே வந்தனர்.
சமூக இடைவெளி
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளியில் வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் கடையில் பொதுமக்களுக்கு பொருட்களை வினியோகிக்கும் போது எடை எந்திரத்தில் அருகே பிளாஸ்டிக் குழாய், இரும்பு தகரம் சிறிது நீளத்திற்கு வைத்து அதன் வழியாக பைகளில் நிரம்பும் படி ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஆண்டும் இதேபோல பொருட்கள் வினியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் பெறாதவர்களும் பெற்று சென்றனர்.
கீரனூர், வடகாடு 
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கீரனூரில் உள்ள ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது. பயனாளிகளுக்கு மே மாதத்திற்கான அரிசி, கோதுமை, டீத்தூள், சோப்பு, துவரம்பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டதன. இதனை வாங்குவதற்காக காலையிலேயே ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் குவிந்தனர். கடை திறந்ததும் முண்டியடித்துக்கொண்டு சமூக இடைவெளியின்றி கொளுத்தும் வெயிலில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வடகாடு பகுதிகளில் ரேஷன் கடைகள் திறந்து இருந்தன. பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். அனைத்து அரசு அலுவலகங்களும் தளர்வில்லா ஊரடங்கால் மூடி இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மட்டும் திறந்து இருப்பது, கொரோனா பரவலுக்கு வழி வகை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் ரேஷன் கடை திறப்பு காரணமாக, ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story