வைகாசி விசாகம்: முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை
வைகாசி விசாகத்தை ஒட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை.
புதுக்கோட்டை:
கோவில் நடை சாத்தல்
முருகப்பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாகம் மிகவும் சிறப்புவாய்ந்தது. அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபடுவார்கள். முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுவது வழக்கம். பக்தர்களும் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை பரவல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கோவில்களில் நடை சாத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் வைகாசி விசாகத்தையொட்டி புதுக்கோட்டையில் முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை. இருப்பினும் வீடுகளில் பூஜை செய்து வழிபட்டு கொண்டனர்.
யாகம்
பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. குமரன் மலை முருகன் கோவிலில் பூஜை மட்டும் நடைபெற்றதாக கோவில் வட்டாரத்தில் தெரிவித்தனர். கடந்த ஆண்டும் இதேபோல கொரோனா ஊரடங்கால் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விராலிமலை முருகன் கோவில்
விராலிமலையில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் மலைமேல் மயிலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். இத்துனை சிறப்புமிக்க இக்கோவிலில் வைகாசி விசாகமானது வெகு விமரிசையாக நடைபெறும். தற்போது முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதிக்கவில்லை. எனவே இந்த வருடம் விராலிமலையில் நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவானது நடைபெறவில்லை.
இந்நிலையில் வழக்கம்போல் முருகன் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.
பக்தர்கள் ஏமாற்றம்
கடந்த 2018 முதல் முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் இக்கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இந்த ஆண்டும் வைகாசி விசாக தேர் மற்றும் தெப்ப திருவிழா நடைபெறும் என பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தேரோட்டம் நடைபெறாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.
Related Tags :
Next Story