குமரியில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து ஆயிரத்து 112 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 41 ஆயிரத்து 950 பேருக்கு 2-ம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
குமரியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக 30 ஆயிரம் டோஸ் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. முதல் நாளான நேற்று முன்தினம் 22 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
சிறப்பு முகாம்கள்
சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி போட கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு மட்டும் 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சியில் டதி பள்ளி, கார்மல் பள்ளி மற்றும் அலோசியஸ் பள்ளி ஆகிய 3 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இங்கு ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முன்னுரிமை அடிப்படையில்...
முதற்கட்டமாக மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்களான பால் முகவர்கள், பேப்பர் வினியோகம் செய்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு முன்னுரிமை தடுப்பூசி போடப்பட்டது. சிறப்பு முகாம்களை தவிர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
முன்னதாக நாகர்கோவில் வட்டவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அதை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர், ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து டாக்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் ரெமா மாலினி, உதவி மருத்துவ அலுவலர் மதனம், வட்டார மருத்துவ சுகாதார ஆய்வாளர் அய்யப்பன், மருந்தாளுனர் விக்டர், செவிலியர் பிரேம லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல்
குளச்சல் அரசு மருத்துமனையில் மருத்துவ அலுவலர் கற்பகம் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டனர். நேற்று 18 வயதிற்கு மேற்பட்ட 160 பேருக்கு முதற் கட்ட தடுப்பூசி போடப்பட்டது. கடந்த வாரம் 45 வயதிற்கு மேற்பட்ட 900 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முட்டம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. மருத்துவ அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் 250 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.
தோவாளை
தோவாளை யூனியனில் செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நேற்று மதியம் 12 மணியளவில் 200 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜோஸ்வா, மணிகண்டன், பிரிட்டோ, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அய்யா குட்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மேலும், யூனியனுக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று தடுப்பூசி போடும் பணியும் நடந்தது. தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் அனைத்து மையங்களிலும், சிறப்பு முகாம்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 36 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தக்கலை
தக்கலை தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதனால் தடுப்பூசி போட பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரியில் 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட மருந்து இருந்தது. அதைத்தொடர்ந்து தடுப்பூசி போட 300 பேர்களை மட்டும் அனுமதித்த போலீசார், காத்திருந்த மற்றவர்களை கலைந்து செல்ல கூறினர். இதனால் கால்கடுக்க காத்திருந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story