சேலம் இரும்பாலை மையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நாளை முதல் சிகிச்சை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்


சேலம் இரும்பாலை மையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு  நாளை முதல் சிகிச்சை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 26 May 2021 4:10 AM IST (Updated: 26 May 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நாளை முதல் சிகிச்சை

சேலம்:
சேலம் இரும்பாலை மையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நாளை முதல் சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்
ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள்  எஸ்.ஆர்.பார்த்திபன், பொன் கவுதம சிகாமணி, சின்ராஜ் மற்றும் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 98 ஆயிரத்து 538 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். தற்போது 65 ஆயிரத்து 700 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. முழு ஊரடங்கையொட்டி 524 வாகனங்கள் மூலம் காய்கறிகள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதன்படி நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் 385 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் தற்போது 11 ஆயிரத்து 700 ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் செய்யப்பட்டு தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரும்பாலை
சேலம் இரும்பாலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஆக்சிஜன் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இந்த பணி விரைவில் முடிவடையும். எனவே நாளை (வியாழக்கிழமை) முதல் சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டு உள்ள சிகிச்சை மையத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆக்சிஜன் அமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் 28-ந் தேதி முதல் அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் 38 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சேலத்தை விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றப்படும். மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகள், வட்டாரங்கள், நகராட்சிகள், மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்கள் ஆகிய ஒவ்வொன்றுக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பற்றாக்குறை இல்லை
அதேபோன்று தம்மம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், இளம்பிள்ளை ஆகிய 4 பேரூராட்சிகளுக்கும் தனித்தனியே சிறப்பு அதிகாரிகளை நியமித்து உள்ளோம். இவர்கள் தலைமையில் அலுவலர்கள் தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. தடுப்பூசியை கவனிப்பதற்கு தனி அலுவலரை நியமித்து உள்ளோம். சேலத்துக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கூடுதலாக கேட்டுள்ளோம். மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி தேவையின்றி வாகனத்தில் சுற்றி வந்தவர்களுக்கு இதுவரை ரூ.2 கோடியே 50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
24 மணி நேரத்துக்குள்...
கொரோனா தொற்று பரிசோதனை முடிவை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று பரிசோதனைக்கு வந்தவர்கள் யாரும் பரிசோதனை செய்ய முடியவில்லை என திரும்பி போக கூடாது என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் ஸ்கேன் சென்டர்களில் அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி தனியார் ஸ்கேன் சென்டருக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என தனியாக 50 படுக்கை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் .சந்தோஷ் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
............

Next Story