வீடு, வீடாகச் சென்று காய்கறி விற்பது போல் நடித்து மினிவேனில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது


வீடு, வீடாகச் சென்று காய்கறி விற்பது போல் நடித்து மினிவேனில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2021 10:34 AM IST (Updated: 26 May 2021 10:34 AM IST)
t-max-icont-min-icon

கொடுங்கையூரில் வீடு, வீடாகச் சென்று காய்கறி விற்பது போல் நடித்து, மினிவேனில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர், 

ரோனா தளர்வில்லா ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்கறி, பழங்கள் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விருப்பமுள்ள வியாபாரிகள் மாநகராட்சியில் அனுமதி பெற்று மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் விற்கலாம்.

இதை பயன்படுத்தி கொடுங்கையூர் எருக்கஞ்சேரி சின்னண்டி மடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மினி வேனில் சிலர் காய்கறி விற்பது போல் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், நேற்று கொடுங்கையூர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மினிவேனை மடக்கி சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மாதவரத்தை சேர்ந்த சுதர்சனம் (வயது 38), மினி வேன் டிரைவர் மணிகண்டன் (27) என்பது உறுதியானது.

இவர்கள் ஆந்திராவிலிருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து மாதவரத்தில் பதுக்கி வைத்து காய்கறி விற்பது போல் மதுபாட்டில்களை விற்பது விசாரணையில் தெரியவந்தது. 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்கள் மற்றும் மினிவேனை பறிமுதல் செய்தனர்.

Next Story