குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 26 May 2021 5:24 PM IST (Updated: 26 May 2021 5:24 PM IST)
t-max-icont-min-icon

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன்12-ந்தேதி திறக்கப்படுமா? என நாகை கடைமடை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். மேலும் கோடை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதிக்கு பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் பருவமழை சரிவர பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக முப்போகம் சாகுபடி என்பது கானல் நீராகவே இருந்து வந்தது. இதனால் ஒருபோக சாகுபடியான சம்பாவின் பரப்பளவும் குறைந்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு (2020) ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொண்டு கூடுதல் மகசூல் பெற்றனர்.

அதே போல இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என நாகை கடைமடை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். நாகை மாவட்டத்தை பொறுத்தவரை, காவிரி நீரை நம்பியே நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் 3,250 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே குறிப்பிட்ட தேதியில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் இந்த இலக்கானது, 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்கும் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து நாகை கடைமடை விவசாயிகள் கூறியதாவது :-

காவிரி டெல்டா பகுதிக்கு குறுவை பாசனத்துக்கு இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சாதகமான சூழல் உள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் தமிழகத்திற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்றால் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும். கர்நாடகத்தில் மழை பெய்து உபரி நீரை மட்டும் தமிழகத்துக்கு திறந்து விடும் நிலையை மாற்றி தமிழகத்துக்கு உரிய நீரை பெற அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது குறித்து முன்கூட்டியே தெளிவாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி மேற்கொள்ள போதுமான விதைநெல், உரம் ஆகியவை 100 சதவீதம் மானியத்துடன் வழங்க வேண்டும். இடுபொருட்களை திட்டமிட்டு வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story