முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் திறப்பு - சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கிச்சென்றனர்
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்சென்றனர்.
விழுப்புரம்,
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதோடு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதுபோல் ரேஷன் கடைகளும் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொது வினியோக திட்ட பொருட்களை தொடர்ந்து பெறும் வகையிலும், கொரோனா முதல்கட்ட நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்தை இதுவரை பெறாதவர்கள் அதனை பெறும் வகையிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழலிலும் அனைத்து ரேஷன் கடைகளும் 25-ந் தேதி (நேற்று) முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் தடையின்றி செயல்பட ஆரம்பித்தன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகளும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. அந்த கடைகளில் விற்பனையாளர்கள், முக கவசம் அணிந்தபடி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கொரோனா நிவாரண முதல்கட்ட தொகையான ரூ.2 ஆயிரத்தை இதுவரை பெறாத பொதுமக்கள் சிலரும் அந்த தொகையை பெற்றுச்சென்றனர்.
Related Tags :
Next Story