கள்ளக்காதலை கண்டித்ததால் பெண் மகள் படுகொலை
மதுரை அருகே கள்ளக்காதலை கண்டித்த பெண்ணும், அவருடைய மகளும் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மற்றொரு மகளும், அவருடைய கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
மேலூர், மே
மதுரை அருகே கள்ளக்காதலை கண்டித்த பெண்ணும், அவருடைய மகளும் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அந்த பெண்ணின் மற்றொரு மகளும், அவருடைய கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த பயங்கர இரட்டைக்கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய்-மகள்
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள பதினெட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவருடைய மனைவி நீலாதேவி (வயது 47). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள்.
மூத்த மகள் மகேசுவரி (25) திருமணமாகி மேலூரில் வசித்தார். 2-வது மகள் அகிலாண்டேசுவரியை (22) சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகில் உள்ள சிவரக்கோட்டையில் பிரசாத் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரைவிட்டு பிரிந்து அவர், பதினெட்டாங்குடியில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
ஒரு மகன் மேலூரிலும், மற்றொரு மகன் வெளிநாட்டிலும் வசிக்கின்றனர். முத்துக்கிருஷ்ணன் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்துக்கு இரவுநேர காவல் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டார்.
தூங்கிக் கொண்டிருந்தனர்
இதனால் நீலாதேவியும், அவரது மகள் அகிலாண்டேசுவரியும் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் தூங்கினர். நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த சிலர், கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்தனர்.
சுதாரித்து எழுந்து தாயும், மகளும் தப்புவதற்குள் பயங்கர ஆயுதங்களால் நீலாதேவியையும், அவரது மகள் அகிலாண்டேசுவரியையும் சராமாரியாக தலை, முகத்தில் அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து, அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
தடயங்கள்
இதற்கிடையே இந்த இரட்டைக்கொலை குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட தாய்- மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த வீட்டில் கொலையாளி ஒருவனின் லுங்கி போலீசாரிடம் சிக்கியது. மேலும் ரத்தக்கறையுடன் கால் தடங்கள் பதிவாகி இருந்தன. அவற்றை தடயவியல் போலீசார் ஆய்வு செய்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது.
சம்பவம் நடந்த வீட்டை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பார்வையிட்டார். தப்பிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க துணை சூப்பிரண்டு ரகுபதிராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கள்ளக்காதல்
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் கள்ளக்காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
நீலாதேவியின் மூத்த மகள் மகேசுவரிக்கும், கீழவளவைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சசிக்குமாருக்கும் (27) கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இது தெரியவந்ததால் நீலாதேவியும், அகிலாண்டேசுவரியும் கண்டித்துள்ளனர். எனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் அவர்களை கொலை செய்ய சசிக்குமார் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு மகேசுவரியும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் மேலூர் போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது சசிக்குமார் தனி ஒருவராக சென்று கதவை உடைத்து, 2 பேரை கொன்றிருக்க வாய்ப்பில்லை என்றும், அவருடன் மேலும் சிலர் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே இந்த இரட்டைக்கொலையின் பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறியவும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கள்ளக்காதலை கண்டித்த தாய், தங்கையை கொலை செய்த பெண் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story