ஊட்டி-இத்தலார் சாலையில் மரம் முறிந்து விழுந்தது
ஊட்டி-இத்தலார் சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
ஊட்டி,
ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி-இத்தலார் சாலை முள்ளிக்கொரை என்ற இடத்தில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கேரட் அறுவடைக்கு செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். பெரிய மரம் என்பதால் அரை மணி நேரம் போராடி அப்புறப்படுத்தப்பட்டது.
பந்தலூர் பகுதியில் பெய்த மழையால் கால்வாய், நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்றின் காரணமாக நெலாக்கோட்டையில் இருந்து சுல்தான்பத்தேரி செல்லும் சாலையில் ராட்சத மரத்தின் கிளை முறிந்து சாலையில் விழுந்தது.
இதுகுறித்து அறிந்த கூடலூர் தீயணைப்பு படையினர், நெலாக்கோட்டை போலீசார் மற்றும் பிதிர்காடு வனத்துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-3.2, நடுவட்டம்-18, அவலாஞ்சி-18, எமரால்டு-10, அப்பர்பவானி-11, கூடலூர்-30, தேவாலா-34 உள்பட மொத்தம் 207.60 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 7.16 ஆகும்.
Related Tags :
Next Story