கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 26 May 2021 10:56 PM IST (Updated: 26 May 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் அ திகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக, தற்போது தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மந்தாரக்குப்பம், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. முதல்அலையின் போது நகரப்பகுதியிலேயே அதிகப்படியானவர்கள் தொற்றுக்கு ஆளானார்கள். ஆனால் தற்போது 2-வது அலையில் கிராமப்பகுதியில் அதிகம் பேர் தொற்றுக்கு உள்ளாகி வருவது கவலையை தந்துள்ளது. இதனால் கிராமப்புற பகுதியில் முகாம்கள் நடத்தப்பட்டு, தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்ணாகிராமம்

அந்தவகையில்  அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குட்பட்ட 42 ஊராட்சிகளில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட ஊராட்சியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் சுப்பிரமணிய சிவா ஊராட்சி ஊழியர்கள் 15 கிராமத்தில் வீடு வீடாக சென்று யாருக்கெனும் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி உள்ளதா? என பொதுமக்களிடம் கணக்கெடுக்கும் பணி நடத்தி வருகிறார்கள். 


இந்த பணிகளை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.   பின்னர் ஊராட்சி ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மேற்கொண்டு வந்த கணக்கெடுக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு, தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கம்மாபுரம்

இதேபோல் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குவெள்ளூர் ஊராட்சியில் தெற்குவெள்ளூர், வேப்பங்குச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதனால் நேற்று காலை முதல் அந்த பகுதிக்கு வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையிலும், அங்கிருந்து யாரும் வெளியே செல்லாதபடியும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவ பணியாளர்கள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை

மேலும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் உத்தமசோழ மங்கலம்  ஊராட்சியை சேர்ந்த ராதா விளாகம் கிராமத்தில் ஒரே நாளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையறிந்த பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி ராதிகா, ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா ராஜ்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிைய பார்வையிட்டு, அங்கு தடுப்புகளை கொண்டு அடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், பணி மேற்பார்வையாளர் செல்வம், ஊராட்சி மன்ற துணை தலைவர் தேன்மொழி ரஜினிகாந்த் , ஊராட்சி செயலர் ராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பெண்ணாடம் 

பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமலை அகரம் கிராமத்தில் 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் அங்கு  பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ அலுவலர் கிளாடியல் ஜெனிபர் தலைமையிலான மருத்துவ குழுவினர் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். 

இதில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கிராமத்தில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு தடுப்பூசி போடும் முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.கிராமப்புறங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்


Next Story