பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செம்மண் சாலை இரு மாவட்ட போக்குவரத்து துண்டிப்பு
பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் வெள்ளத்தில் செம்மண் சாலை அ டித்து செல்லப்பட்டது. இதனால் கடலூர், அரியலூர் மாவட்டத்துக்கான போக்குவரத்து அந்த பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம்,
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ளது செம்பேரி கிராமம். இந்த கிராமத்தையும் அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தையும் பிரிக்கும் வகையில் வெள்ளாறு பாய்ந்தோடுகிறது.
இந்த இரு கிராம மக்கள் மற்றும் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் ஆற்றின் குறுக்கே செம்மண்ணால் ஆன சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக அவர்களது வணிகம் மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்கு இந்த சாலை பெரிதும் உதவியாக இருந்து வந்தது. ஒவ்வொரு பருவமழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அங்குள்ள மண் சாலையை அடித்து செல்லப்படுவதும், பின்னர் சரிசெய்யப்பட்டு போக்குவரத்துக்கு மீண்டும் பயன்படுத்துவது வழக்கமாகவே இருந்து வருகிறது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டது
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெண்ணாடம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதியில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதேபோல் வெள்ளாற்று நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் ஆற்றில் வெள்ளநீர் அதிகரித்தது.
இதில் செம்பேரி - தெத்தேரி இடையேயான செம்மண் சாலை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல் மூட்டைகள் சேதம்
இதேபோல் திருமலை அகரத்தில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் விவசாயிகளின் விற்பனைக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் என மொத்தம் 300-க்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்னர்.
தொடர்ந்து நேற்று வெயிலில் நெல்லை உலர வைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story