திருவாரூர் மாவட்ட பகுதிகளில், ரேஷன் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் பொருட்கள் வாங்கினர்


திருவாரூர் மாவட்ட பகுதிகளில், ரேஷன் கடைகள் திறப்பு சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் பொருட்கள் வாங்கினர்
x
தினத்தந்தி 26 May 2021 5:33 PM GMT (Updated: 26 May 2021 5:33 PM GMT)

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்.

மன்னார்குடி,

கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை ஒருவாரத்துக்கு அறிவித்து உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. இந்த நிலையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து தமிழக அரசு நேற்று முதல் ரேஷன் கடைகளை திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. மன்னார்குடியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

சமூக இடைவெளி

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் முககவசத்துடன் வர அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.

Next Story