ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு 18 பேர் பலி
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை
525 பேருக்கு கொரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு, தனியார் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
11 பேர் பலி
தற்போது மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரத்து 551 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று மட்டும் 11 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரிப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பத்தூர்
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 332 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்று மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 3 ஆயிரத்து 284 பேருக்கு போடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 856 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதும், 18 பேர் இறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story