மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு. கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பதிவு செய்யலாம்
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற மாநில அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பு பொருட்கள், சிகிச்சை பொருட்கள், தன்னார்வலர்கள், வாகன ஆதரவு, ரத்ததானம், உணவு பொருட்கள், தானியங்கள், தொலைபேசி ஆலோசனை உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து வழங்கும் பணிகளை மாவட்ட குழுக்கள் மேற்கொள்ளும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், முகவர், தனிநபர்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை https://ucc.uhcitp.in/ngoregistration எனும் இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் அவற்றை பயன்படுத்தும் துறையின் பொறுப்பு அலுவலர்களுக்கு இணையம் மூலம் வழங்கப்படும்.
குழு அமைப்பு
படுக்கை வசதி கொண்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களிலும் ஒரு தகவல் உதவி மையத்தை நிறுவவும் மற்றும் நோயாளியின் நிலை குறித்து நோயாளிகளின் உறவினர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளில் உள்ள தகவல் உதவி மையத்தில் மருத்துவமனைகளுக்கு உதவ தயாராக இருக்கும் தன்னார்வலர்களின் சேவைகளை மாவட்ட குழு கண்டறிந்து பயன்படுத்தும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) கோமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கஜலட்சுமி மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்பட மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story