தொடர் மழையால் குமரியில் 25 குளங்கள் உடைப்பு


தொடர் மழையால் குமரியில் 25 குளங்கள் உடைப்பு
x
தினத்தந்தி 26 May 2021 11:53 PM IST (Updated: 26 May 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் குமரியில் 25 குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. மழை நீடித்தால் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாய நிலை உள்ளது.

நாகர்கோவில்:
தொடர் மழையால் குமரியில் 25 குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. மழை நீடித்தால் 100-க்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாய நிலை உள்ளது.
25 குளங்கள் உடைப்பு
குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வாய்க்கால்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.
குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் கீழ் மொத்தம் 2,040 குளங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1850 குளங்கள் நிரம்பியுள்ளன. 25-க்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீடித்தால் நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் உடையும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
புலியூர்குறிச்சி குளம்
தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட கனக மூலம் குடியிருப்பு பகுதியில் புலியூர்குறிச்சி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, கரை பகுதி அந்தரத்தில் தொங்கியபடி இருக்கிறது. வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள தோட்டங்களில் பாய்ந்தபடி, நாஞ்சில் புத்தனார் கால்வாயில் சென்று சேருகிறது.
இதேபோல தாழக்குடி பகுதியில் உள்ள பெரியகுளமான வீர கேரள அப்ப மேரி குளத்தின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
நெடுங்குளத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் உடைப்பை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளை வலியுறுத்தினார்.
விவசாயிகள் சோகம்
இதேபோல் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னந்தோப்புகள், வாழை தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. 
கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக விவசாயிகள் நெல் வயல்களில் ஏர் உழுது சமன்படுத்திய வயல்களில் எல்லாம் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. நடவுக்காக தயார் செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகளையும் மழை வெள்ளம் மூழ்கியபடி நிற்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து பயிர் சாகுபடி விவசாயிகளும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
இது ஒருபுறமிருக்க குமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் அனைத்திலும் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள், மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
நாகர்கோவில் நகரில் ெரயில்வே காலனி, சக்தி கார்டன், ஊட்டுவாழ்மடம், பறக்கிங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு வீடுகளில் உள்ள மக்கள் வெளியே வரமுடியாத படி தேங்கி நிற்கிறது.
தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பதி சாரம் நெசவாளர் காலனி மற்றும் நாஞ்சில் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் திருப்பதிசாரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
அவர்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். மேலும் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 73 பேருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோவாளை தாலுகாவில் மொத்தம் 15 பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது என்றும், அதில் உள்ள சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரங்கள் சாய்ந்தன-மின்கம்பங்கள் சேதம்
இதேபோல் அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட பிள்ளைத்தோப்பு, பொழிக்கரை, பள்ளம் துறை, நல்லூர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 8 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து உள்ளது. 
இதேபோல் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய நான்கு தாலுகாவிலும் 35 மரங்கள் விழுந்து உள்ளன. 60 வீடுகள் பகுதி அளவு சேதம் அடைந்து உள்ளன. 5 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன
தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், வீடுகளைச் சேர்ந்த மக்கள் சுமார் 350 பேர் 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, படுக்கை வசதிகள் கழிப்பறை வசதிகள், முகக் கவசம் மற்றும் சானிடைசர் வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Next Story