பணியாளர்கள் தடுப்பூசி போடாவிட்டால் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கிடையாது
பணியாளர்கள் தடுப்பூசி போடாவிட்டால் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
விவரங்கள் சேகரிப்பு
வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் பஸ் டிரைவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், அத்தியாவசிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்றோருக்கு செலுத்தப்படுகிறது.
இந்த பணியை வேகப்படுத்தும் பொருட்டு தொழிற்சாலைகள் மற்றும் இதர அனைத்து வகையான தொழிற்சாலைகள், சிறுகுறு தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தற்போது முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கென மாவட்ட தொழில்மைய பொது மேலாளர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் ஆகியோர் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகளில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ள பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு முகாம்களை தினமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இயங்க அனுமதி கிடையாது
எனவே இதனை பயன்படுத்திக் கொண்டு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் தங்களது தொழிற்சாலையிலேயே பணியாளர்கள் அனைவரையும் வரவழைத்து சிறப்பு முகாமினை ஏற்பாடு செய்து கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் இயங்கிட அனுமதி அளிக்கப்படாது.
அதிகரித்து வரும் கொரோனாவை சமாளிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என்பதை உணர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், அனைத்து வகையான நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story