கிராமங்களில் 144 சிகிச்சை மையங்கள்


கிராமங்களில் 144 சிகிச்சை மையங்கள்
x
தினத்தந்தி 27 May 2021 12:00 AM IST (Updated: 27 May 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரக பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கிராமங்களில் 144 சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவை

ஊரக பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து கிராமங்களில் 144 சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கிராமப்புற பகுதிகளில் கொரோனா

தமிழக அளவில் கோவை மாவட்டத்தில்தான் தற்போது கொரோனா தொற்று பரவும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் தொற்று பாதித்தவர்களில் கோவை மாநகராட்சி பகுதியில் 72 சதவீதம் இருந்தனர். 

மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை காரணமாக இந்த தொற்று சதவீதம் தற்போது 54 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் சூலூர் பகுதியில் தொற்று 11 சதவீதமாக அதிகரித்து உள்ளது. 

இதுதவிர துடியலூர், பொள்ளாச்சி, அன்னூர் உள்ளிட்டவற்றில் கிராமப்புற பகுதிகளில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்து உள்ளது.

700 படுக்கை வசதிகள் 

மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக வால்பாறையில் தொற்று பாதிப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது. மொத்த பாதிப்பில் தற்போது ஊரக பகுதி 50 சதவீதத்தை நெருங்கி வருகிறது. 

இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகள், 37 பேரூராட்சிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த கலெக்டர் உத்தர விட்டார்.  

மேலும் ஊராட்சிக்கு ஒன்று வீதம் கொரோனா கண்காணிப்பு குழு அமைத்தும் உத்தரவிடப்பட்டது. தற்போது மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 வீதம் 144 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இங்கு முதற்கட்டமாக 700 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த சிகிச்சை மையங்கள் அனைத்தும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

 இது குறித்து ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கண்காணிப்பு தீவிரம்

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில் இருக்கும் கிராமங்களில் 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இங்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும் சிகிச்சை பெறும் நோயாளிகள் யாருக்காவது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டால் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வைத்திருக்க உத்தரவிட்டு உள்ளோம். 

தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள முடியாதவர்கள் இந்த மையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள். இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கவும் அனுமதிக்கப் பட்டு உள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story