4 சிலைகள் பறிமுதல்
நரிக்குடி அருகே 4 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கை பயன்படுத்தி விற்க முயன்ற கும்பல் போலீசாரிடம் சிக்கியது.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே 4 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கை பயன்படுத்தி விற்க முயன்ற கும்பல் போலீசாரிடம் சிக்கியது.
வாகன சோதனை
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் பல இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி-கமுதி சாலையில், அபிராமம் சந்திப்பில் வீரசோழன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அம்மன் சிலை
அப்போது அந்த வழியாக திருச்சுழி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்லமுயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் உலோகத்திலான சிறிய அம்மன் சிலை ஒன்று இருந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரையும் சிலையோடு நரிக்குடி போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாணையில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பழனிசாமி (வயது32), கூரிப்பாண்டி (40) என்பது தெரியவந்தது.
3 சிலைகள் மீட்பு
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது இதே போல் மேலும் 3 சிலைகள் தங்களது கூட்டாளியான மினாக்குளத்தை சேர்ந்த பூசாரியான சின்னையா (62) என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மினாக்குளம் சென்று சின்னையாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு புத்தர் சிலை, விநாயகர் சிலை மற்றும் பெரிய அம்மன் சிலை ஆகிய 3 சிலைகளையும் மீட்டனர்.
4 பேர் கைது
சிலைகளை பதுக்கியதாக சின்னையா மற்றும் பழனிமுருகன் (42) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தற்போைதய ஊரடங்கை பயன்படுத்தி சிலை விற்க திருச்சுழிக்கு கொண்டு செல்ல முயன்ற போது போலீசாரிடம் சிக்கியதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்தனர்.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி அளித்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வேறு எங்கும் சிலைகளை திருடினார்களா? வெளிநாடுகளுக்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்ட சிலைகளா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story