ஊரடங்கால் முடங்கிய கூடை பின்னும் தொழில்
ஊரடங்கால் முடங்கிய கூடை பின்னும் தொழில்
காரைக்குடி
காரைக்குடி அருகே ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. மேலும் இங்குள்ள பிரமாண்ட வீடுகள் பழங்கால கட்டிட கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகள் வருவது மட்டுமல்லாமல் இந்த வீடுகளில் சினிமா படப்பிடிப்புகளும் நடக்கும்.. இதற்கு அடுத்தப்படியாக இங்குள்ள வீடுகளில் கூடைகள் பின்னும் தொழில் அதிகமாக நடந்து வருகிறது.. இந்த தொழிலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.. இங்கு தயாரிக்கப்படும் இந்த கூடைகள் விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கூடை பின்னும் தொழிலை இப்பகுதி பெண்கள் ஒரு குழு அமைத்து செய்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பரவலால் கடந்த 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் இங்கு தயாரான கூடைகள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கி உள்ளன. மேலும் இத்தொழிலை நம்பியிருந்த பெண்களும் வருமானம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கூடைகள் பின்ன பயன்படும் மூலப்பொருட்கள் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரத்து இல்லாததால் இந்த தொழில் தற்போது அடியோடு முடங்கிபோன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடை பின்னும் தொழில் செய்து பெண்கள் தரப்பில் கூறியதாவது, கூடை பின்னும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை சம்பளமாக கிடைக்கும். இங்கு பூ மாடல் கூடைகள், மதிய உணவு எடுத்து செல்லும் கூடைகள், அர்ச்சனை கூடைகள், சுபகாரியங்களுக்கு பயன்படுத்தப்படும் சீர்வரிசை கூடைகள் தயார் செய்து வருகிறோம். ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் இருந்து வருகிறோம். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கூடைகளையும் போக்குவரத்து வசதியில்லாததால் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் உள்ளது. எனவே தமிழக அரசு மானிய உதவி செய்தால் மட்டும் தான் மீண்டும் இந்த தொழிலை செய்ய முடியும் என்றனர்.
Related Tags :
Next Story