பவானிசாகர் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை சாவு
பவானிசாகர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக இறந்தது.
மின்வேலி
பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது காராச்சிகொரை கிராமம். இந்த கிராமத்தில் விவசாயிகள் அதிகமாக வாழை பயிரிட்டுள்ளனர். சில விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க தோட்டத்தைச் சுற்றிலும் வேலி அமைத்துள்ளனர். இந்த வேலியில் பேட்டரி மின்சாரம் பாய்ச்சிக்கொள்ள வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் விவசாயிகள் சிலர் வேலியில் நேரடியாக மின்சாரத்தை பாய்ச்சுகிறார்கள்.
இதனால் தோட்டத்துக்கு பயிர்களை தேடிவரும் யானை உள்ளிட்ட விலங்குகள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
ஆண் யானை
இதுபோன்ற சம்பவம் காராச்சிகொரை கிராமத்தில் மீண்டும் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
காராச்சிகொரையை சேர்ந்தவர் ராஜன் என்கிற மனோகரன் (வயது 52). விவசாயி. இவர் தன்னுடைய வாழை தோட்டத்தை சுற்றி வேலி அமைத்துள்ளார். அதில் அவர் மின்சாரத்தை பாய்ச்சி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மனோகரனின் வாழைத் தோட்டத்திற்கு வந்தது. பின்னர் தோட்டத்துக்குள் புகுந்து சுமார் 150 வாழைகளை சேதப்படுத்தியது. பிறகு தோட்டத்தை விட்டு வெளியே வரும்போது மின்சார வேலியில் சிக்கி துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தது.
வலைவீச்சு
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், பவானிசாகர் வனத்துறையினர் கால்நடை டாக்டருடன் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
மின்வேலி அமைத்திருந்த விவசாயி மனோகரன் தலைமறைவாகிவிட்டார். அவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘காராச்சிகொரை கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயம் தான் முதன்மையான தொழில். குறிப்பாக வாழை அதிகமாக பயிரிட்டுள்ளோம். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருகிறது.
யானைகள் வெளியேறாமல் இருக்க, குறிப்பிட்ட இடங்களில் அகழி வெட்டுங்கள் என்று பலமுறை வனத்துறையிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்கள்.
Related Tags :
Next Story