வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்தும், கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ந் தேதி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவியேற்ற நாளை கருப்பு தினமாக அனுசரிக்கக் கோரியும் அகில இந்திய போராட்டக்குழு சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்றைய நாளை கருப்பு தினமாக அனுசரித்து பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.
ரூ.7,500 வழங்கிட வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவினால் வேலை இழந்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச உணவு தானியங்களோடு மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 மத்திய அரசு வழங்கிட வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனே கூட்ட வேண்டும்.
மின்சார சட்ட திருத்தம், மோட்டார் வாகன சட்ட திருத்தம் ஆகியவற்றை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கட்சியினர் பங்கேற்பு
மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், தி.மு.க.வினர், மனிதநேய மக்கள் கட்சியினர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் ஆகியோர் மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story