கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகள்; காஞ்சிக்கோவில் அருகே பரபரப்பு


கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி போராட்டம் நடத்திய விவசாயிகள்; காஞ்சிக்கோவில் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 May 2021 2:06 AM IST (Updated: 27 May 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சிக்கோவில் அருகே கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

பெருந்துறை
காஞ்சிக்கோவில் அருகே கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். 
கான்கிரீட் தளம் 
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் முள்ளம்பட்டி, பெரியவிளாமலை, என்.கந்தாம்பாளையம், திருவாச்சி ஆகிய ஊராட்சிகளின் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. நீர் விரயத்தை தடுக்கும் வகையில், இந்த பகுதிகளின் வாய்க்காலுக்குள் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2011-ம் ஆண்டு கான்கிரீட் தளம் போடும் பணியை தொடங்கியது.
ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்றினால், வாய்க்காலின் கசிவு நீரை நம்பியுள்ள, தென்னை மற்றும் வாழைகளுக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், விவசாயக்கிணறுகள் வற்றி கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 
போராட்டம்
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முள்ளம்பட்டி அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்குள் கான்கிரீட் தளம் போடும் பணிக்காக, பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மண்ணை தோண்டும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்கினார்கள்.
இதை அறிந்த  கீழ்பவானி பாசன விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் நேற்று காலை முள்ளம்பட்டி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு விரைந்து வந்து பொதுப்பணித்துறையின் பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் வாய்க்காலுக்குள் இறங்கி கான்கிரீட் தளம் போடக்கூடாது என்று கோஷம் போட்டார்கள்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், கீழ்பவானி பாசன திட்ட மேலாளர் குமார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். முடிவில், கொரோனா தொற்று பரவல் நீங்கும் வரை பணியை தொடங்குவதில்லை என்றும், அதன்பிறகு, அரசின் ஆலோசனையை பெற்று நடந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து 3 மணி நேரம் நடந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்கள். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் முள்ளம்பட்டி ஊராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story