ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரம்; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் செயல்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் எந்திரத்தின் செயல்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
அரசு ஆஸ்பத்திரி
ஈரோடு தந்தை பெரியார் தலைமை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு சுமார் 450 படுக்கைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டு சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் 60 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வழங்கும் வசதி இருந்தது. இதனால் கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டு நுரையீரல் செயல் திறன் இழந்தும், உடலில் ஆக்சிஜன் அளவும் குறைந்த பலருக்கு உரிய நேரத்தில் உயிர் சுவாசக்காற்று வழங்க இயலாத நிலை இருந்தது.
இந்தநிலையில் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் கொரோனா பணிகளை விரைவுப்படுத்த அமைச்சர்களை நியமித்தார். அதன்படி ஈரோடு மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நியமிக்கப்பட்டார். அவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளையும் பார்வையிட்டு அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதன்படி முதல் கட்டமாக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிக்கான கட்டமைப்புகள் உருவாக்கும் பணி நடந்தது.
ஆக்சிஜன் உற்பத்தி
இந்த பணியில் தனியார் நிறுவனங்கள், தொழில் அதிபர்களை பங்கு பெற வைத்தார். மேலும் ரோட்டரி சங்கம் மூலமும் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியதுடன், இங்கு கூடுதலாக ஆக்சிஜன் படுக்கைகளையும் உருவாக்க தனியார் பங்களிப்பை வேண்டி பெற்றார். அவரது வேண்டுகோளை ஏற்று ஈரோடு டெக்ஸ்வேலி நிறுவனம், பி.என்.ஐ. எனப்படும் இளம் தொழில் முனைவோர் சர்வதேச வலையம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி கட்டமைப்பு உருவாக்கும் பணிகள் நடந்தன.
இதன் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 40 கொரோனா படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்க திட்டமிடப்பட்டது. சுமார் 10 நாட்கள் தீவிர பணியாற்றிய தொழில் நுட்ப பணியாளர்கள் ஆக்சிஜன் உற்பத்தி கருவியை வெற்றிகரமாக நிறுவி உள்ளனர். இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு ஆக்சிஜன் உற்பத்தி கருவியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ள 40 படுக்கை அறையையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
200 லிட்டர்
நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ராஜசேகரன், டெக்ஸ்வேலி இயக்குனர் டி.பி.குமார், பி.என்.ஐ. பொறுப்பாளர் மகேஷ் பி.வி.கிரி, திட்ட வடிவமைப்பாளர் டாக்டர் கே.பி.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி டாக்டர் செந்தில்குமார் கூறும்போது, “ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடிய நோயாளிகளின் நிலை இனிமேல் யாருக்கும் வரக்கூடாது என்ற நிலைக்காக ஆக்சிஜன் உற்பத்தி எந்திரம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு மொத்தம் ரூ.60 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதில் ரூ.50 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டது. தற்போது நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். 40 படுக்கைகளில் தடை இல்லாமல் சுவாச காற்று வழங்கலாம். இப்போது ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. மேலும் ரூ.6 லட்சம் செலவில் சில படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் கொண்டு செல்லும் குழாய், ஆக்சிஜன் அளவைமானி ஆகியவை பொருத்தப்பட உள்ளன”, என்றார்.
Related Tags :
Next Story