கொளத்தூர் தொகுதி சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


கொளத்தூர் தொகுதி சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x
தினத்தந்தி 27 May 2021 5:28 AM IST (Updated: 27 May 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் தொகுதி சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் கடந்த 24-ந் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 22 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தலா 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வீதம் மொத்தம் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

அந்த ஆலோசனையின்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சென்னை தலைமை செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியிடம் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story