ஆந்திராவிலிருந்து வந்த போது போலீசார் சோதனையில் சிக்கினர் 20 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தல்; 2 பேர் கைது


ஆந்திராவிலிருந்து வந்த போது போலீசார் சோதனையில் சிக்கினர் 20 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2021 1:26 AM GMT (Updated: 27 May 2021 1:26 AM GMT)

திருத்தணி அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்து இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சாராயத்தை கைப்பற்றினர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு அரசால் விதிக்கப்பட்ட ஒரு வார ஊரடங்கு அமலில் உள்ளது. மருந்துக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் திருத்தணி எல்லையில் ஆந்திர மாநிலம் நகரி, தடுக்கு பேட்டை ஆகிய ஆந்திர மாநில பகுதிகளில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கின்றன.இதனால் தமிழக குடிமகன்கள் ஆந்திர மதுபான கடைகளுக்கு படை எடுத்துச் செல்கின்றனர். இவர்களில் சிலர் அங்கேயே மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் இரு சக்கர வாகனங்களில் அதிவேகத்துடன் திருத்தணி நகருக்குள் நுழைகின்றனர்.

2 பேர் கைது

இதையடுத்து திருத்தணி போலீசார் எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். நேற்று காலை நடந்த வாகன சோதனையில், ஆந்திரமாநிலம் நகரியிலிருந்து மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்ததில் அவர்களிடம் தலா 10 லிட்டர் ஆந்திர கள்ளச்சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் திருத்தணி அருகே தெக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேகர் (வயது 45), முனுசாமி (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story