போக்குவரத்து நெரிசலை உருவாக்கிய போலீசார்
விழிப்புணர்வு நடவடிக்கைக்காக வாகனங்களை போலீசார் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேனி:
தேனியில், டிரோன் கேமரா பறக்கவிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று போலீசார் திட்டமிட்டனர். இந்த டிரோன் கேமராவில் வாகனங்கள் அதிக அளவில் செல்வது போன்று காட்சிகளை பதிவு செய்வதற்காக, சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்தனர்.
அதன்படி, தேனி போலீஸ் நிலையம் அருகில் என்.ஆர்.டி. நகர் சாலை சந்திப்பு பகுதியில் சாலையின் இருபுறமும் வந்த வாகனங்களை போலீசார் நிறுத்தினர். இருசக்கர வாகனங்கள், கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்தன.
மருத்துவமனைக்கு சென்றவர்களும், மருந்து வாங்கச் சென்றவர்களும் எதற்காக காத்திருக்கிறோம் என்றே தெரியாமல் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் இதற்கான காரணம் கேட்டபோது, விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாக கூறி நிறுத்தினர். பின்னர் டிரோன் வர தாமதம் ஆகிறது என்று கூறி வாகன ஓட்டிகளை அனுப்பி வைத்தனர்.
இதனால், மக்கள் பலரும் எதற்காக காத்திருந்தோம் என்பதே தெரியாமல் பரிதவிப்புடன் அங்கிருந்து புலம்பியபடியே புறப்பட்டுச் சென்றனர். பின்னர், அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் டிரோன் கேமரா பறக்கவிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
-------
Related Tags :
Next Story